ஒருமையில் கலப்பதற்கு....

காலமும் வெளியும் அற்ற
சூனியப் புள்ளி ஒன்று.
சக்தியும் பொருளும் இருக்க
சாத்தியமில்லை அங்கு.

விஞ்ஞான விதிகள் ஏதும்
இல்லாத ஒருமைக் கணம்.
வெடித்தது ஏனோ அன்று
தோன்றிற்று காலமும் வெளியும்.

சக்தியும் பொருளும் எதிராய்
சமைத்தது பிரபஞ்ச உருவை.
அறிவியல் விதிகள் தம்மை
அமைத்துக் கொண்டன தாமே.

எதற்கிந்த மகா பிரளயம்?
எதைநோக்கி இந்தப் பயணம்?
ஏன் இவ்விதம்? இப்படிமட்டும்?
ஒளியும் இருளும் செய்யும் மாயம்.

எத்தனை கோடி நட்சத்திரங்கள்?...
எத்தனை கோடி விண்மீன் கூட்டம்?...
கோடி கோடி கோள்கள் உண்டு...
எத்தனையில் உயிர்கள் உண்டு?

விடைகளைத் தேடத்தேட
மனதினுள்ளும் சூனியப் புள்ளி.
வெடித்திடக் காத்திருக்கிறேன்
ஒருமையில் கலப்பதற்கு.




நெரிசல்...

போக்குவரத்து நெரிசலின்
வாகன வரிசைகள்.
பச்சை விளக்குக்காய்
பறக்கும் மனிதர்கள்.
கரியமில வாயுவின்
கரும்புகை மண்டலம்.
இடையிலும் சிறகடிக்கும்
பட்டாம் பூச்சி....

வருகைப்பதிவு.

நூறுசதவிகித வருகைப்பதிவு;
பரிசளிக்க மேடையில் அழைப்பு.
அன்று மட்டும் வரவில்லை
அவன்.

பனித்துளிகள்...

நிலவொளியில் குளித்தெழுந்த

மேகங்கள் தலைசிலுப்ப

பூமியில் பூக்களின்மேல்

பனித்துளிகள்.



ஓட்டுவீடுகள்...

ஒட்டடை அடிப்பது
ஓடு மாற்றுவது
ஒழுகும் மழைநீருக்கு
வாளிகள் வைப்பது
கோடையின் வெம்மையில்
நடுநசித் தேள்கடி.
காற்றின் சேமிப்பு
முற்றத்தில் குப்பையாய்.
இயற்கை உபாதைக்கோ
தொலைதூரப் பயணம்.
இடர்கள் இத்தனையும்
இருந்த போதினிலும்
ஒட்டிக் கொண்டிருந்த
ஓட்டு வீடுகளில்
வாழ்க்கை
நிறைவாய்தான் இருந்தது
ஒட்டாதிருக்கும்
ஒட்டுவீடுகளை விட...

பாதை மலர்கள்...

பாதையில் உதிரும் மலர்களின்மேல்
இரக்கமின்றி
செருப்புகள் ஏறிச்சென்றாலும்
மனிதர்கள்மீது
பூக்களைச் சொரிவதைமட்டும்
என்றும் நிறுத்துவதில்லை மரம்...
உன்மீதான உணர்வுகளை உதிர்க்கும்
என் மனம் போலவே...

இடைவெளி...

ஒரு வட்டத்தின்
இரு நெருக்கமான புள்ளிகள்தான்
வெகு தொலைவிலும் இருக்கின்றன....
எதிர்புறம் நோக்கும்போது......

பறவைகள்...

"On Jan 16th a Jet liner landed in River in full view of New York City skyscrapers on Thursday aftera collision with a flock of birds apparently knocked out both engines."
The other angle of this statement: We are tresspassing their path and not those winged angels...

அலுமினியப் பறவைகளில் அடிபட்டு உயிர்துறக்கும்
வலுவற்ற பறவைகள் உயிர்பற்றிக் - கலங்காமல்
பறவைகள் தொல்லையால் பலகோடி இழப்பென்றான்
மரமாகி நிற்கும் மனிதன்.

நீ.....

சிலசமயம் நிழலாய்
எப்போதும் என் அருகில்...
சிலசமயம் நிலவாய்
எட்டாமல் வெகு தொலைவில்.....

மழை...

மழை பெய்கிறது...
நனைகிறது
என் மனம்.......

மழலை

தத்தித்தளிர் நடைநடந்து தரைவிழுந்த மலரெடுத்து
பொத்துகின்ற கைகண்டு பூநாணும்- முத்துப்பல்
புன்னகையில் கண்சிரிக்கும் பூமுகத்தைப் பார்த்திருக்கும்
என்னுவகை சொல்வேன்நான் எவ்வாறு?

குல்மொஹர் மரம்...

இலை துளிர்க்க மறந்து...
வெட்கத்தில்...
பூக்களாய் சிரிக்கும்
குல்மொஹர் மரம்...

நீயும் நானும்...

தன்னைப் பற்றியே
யாரும் நினைப்பதில்லை.
என்னைப் பற்றியே
நானும் நினைப்பதில்லை.
நீயேநானாகி நின்றுவிட்டபின்பு
உன்னைப் பற்றியும்
நான் நினைப்பதில்லை...

மரணம்...

இறப்பது மட்டுமே மரணம் இல்லை...
அன்பானவர்கள் நம்மை
மறப்பதும் மறுப்பதும்
தவிர்ப்பதும் கூட......

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..