குழந்தை

நீந்தத் தொடங்கியது...
குழந்தை   வரைந்து 
தொட்டியிலிட்ட மீன்...

சேவலுக்குத் தெரியாது...

சேவல் கூவி
பொழுதும் விடிந்தது.
அன்றைக்கு அம்மன் கொடை...


உனக்கான என் காதல்...

கொண்டாட யாருமில்லை என்று
பூக்காமல் இருப்பதில்லை
தனிமையாய் இருக்கும் மரம்.

***

உதயமும் அஸ்தமனமும்
பூமிக்குத்தான்
மறைதலும் எழுதலும்
கதிரவனுக்கில்லை. 

பட்டாம்பூச்சி...

தொட்டுவிட்டோமே  என்று
துக்கமாய் இருந்தது.
விரல் நுனிகளில்
வண்ணத் துணுக்குகள்.


பயணங்கள்...

எனது ஒவ்வொரு ரயில் பயணத்திலும்
தொடர்ந்து கொண்டே  இருக்கிறது
உறவாய்  மாறிய
நம் முதல் பயணம்...



மின்னுகின்ற மணற்துகள்கள்...

கடற்கரை மணலில்
பௌர்ணமி இரவில்...
காலம் காலமாய்
மின்னிக் கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட நேசங்களின்
உச்சத்தில் சிதறிய
அன்புத் துகள்கள்...


நான்...

தனியாய் இல்லையெனினும் 
தனிமையில்  இருக்கிறேன்...
புலர் காலை தொடங்கி 
புலன் உறங்கும் நேரம் வரை
துணையாய் நிற்கும் 
நம் உறவின் நினைவுகளை  
அணைத்தபடி உறங்கும் 
என்மேல் 
கவனமாய் இருளைப் போர்த்தி
நகர்கிறது இரவு..
விரலிடை நீராய் 
நழுவிக்கொண்டிருக்கிறது காலம்...
இருந்துகொண்டுதான் இருக்கிறேன் 
நான்...

அக்கறைகள்...

என் அக்கறைகள்கூட சமயத்தில்
அவஸ்தைகளாகிப் போகின்றன
உனக்கு....
மௌனமே பதிலாய் அமையும்
உன் எரிச்சலின்
உச்சகட்ட தருணங்களில்...
இல்லாமலே போய்விடுகின்றன
உன் அக்கறைகளும்
மற்றும் என்
அவஸ்தைகளும்



****


கார்களில் பயணிக்கும்
வளர்ப்பு நாய்களும் 
குரைக்கின்றன
சாலையில் தொழில்புரியும் 
எளியவர்களைப் பார்த்து.
  

பிரிவின் பதிவு


மலர் உதிரும் மென்மையுடன்தான்
நமது பிரிவினை நீ பதிவு செய்தாய்.
மனம் ஏனோ மருகுகிறது 
மரமே வீழ்ந்தது போல்...


***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..