பாலை...





கலைந்த தன்  கவிதை வரிகளை
மறுபடியும்
எழுதிக் கொண்டிருக்கிறது காற்று.

மாற்றங்கள்

மனதில் நான் நினைக்கும்போதே
அதனை நீ உணர்ந்த காலங்கள்
தொலைந்து போய்
இப்போதெல்லாம்
குறுந்தகவல்களும்
மின்அஞ்சல்களும் கூட
உன் கண்ணிற்கும் மனதிற்குமான
இடைவெளியில்
காணாமல் போய்விடுகின்றன...
என்றாலும்
கடிதலுககாய் காத்திருக்கிறேன்
நான்.

வன்மம்

வெளிப்பட முடியாமல்
தேங்கித் தேங்கி
விஷமாகிறது அன்பு...

நீ..

பிரம்மன்
ஆர்டரின் பேரில்
செய்து  தந்த சிலை...

சந்திப்பு...(2)

ஏன் நிகழ்ந்ததென்று தெரியாமலேயே
நாடகமாய் நடந்து முடிந்தது 
நமது நேற்றைய சந்திப்பும்.
மழுப்பப்பட்ட வார்த்தைகளும் 
மௌனங்களும் 
நம்மிடையேயான வெற்றிடத்தை 
நிரப்ப முயன்று தோற்றன.
சுடர்ந்துகொண்டிருக்கும் என் அன்பு 
முகமூடிகளையும் மீறி 
உன்னைத் தொட்டிருக்கும் 
நிச்சயமாய்.
மனம் நெகிழ்ந்து தவிக்கிறது 
கட்டுக்களை உடைத்து.
அது நேற்றைய பொழுதில் 
மட்டுமே சாத்தியமானது என்பது 
எனக்குத் தெரியும்.
விடை பெற்ற பொழுதின் வார்த்தைகள் 
அர்த்தமிழந்து ஒலிக்கின்றன.
உயிர்த்து மரிக்கிறேன் 
நான்.

பூங்கா மரம்

கான்கிரீட் தரையில்
உதிர்கின்றன
அந்தப் பெயர் தெரியாத  மரத்தின்
விதைகள்...
 

காக்கை கூச்சல்

நடைபாதையில் இறந்து கிடக்கும்
சகமனிதனை 
சலனமின்றிக் கடக்கிறேன்...
தொலைவினில் காக்கை கூச்சல்...

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..