மழை பெய்யக் கூடும்...
வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...
என் மனம் போன்றே...
எப்போதும் ஒரே மாதிரியே இருப்பதில்லை..
நிராகரிக்கும்போது பாறையாய்
நிராகரிக்கப்படும்போது பாலையாய்..
என் மனம்...
உனக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும்
வெளியில் வெறுமையாய் அலையும்
உனக்கான எனது கரிசனங்கள்
மேகங்களாய்...
வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...
கதவுகள்...
விசும்பலுடன்...
புறங்கையால் விழிநீர் துடைத்து
முகத்தில் அறையப்பட்ட கதவின்முன்
சிதறிக்கிடக்கும் என்னை ஒருவாறாய்
சேகரித்து....
திரும்பிப் பார்த்துக்கொண்டே
தயங்கித் தயங்கி
எனக்காய் திறந்திருக்கும் கதவுகள் நோக்கி
விலகி நடக்கத் தொடங்கி
வெகுநாட்களாகிறது...
ஒவ்வொரு மூடிய கதவையும் கடக்கிறேன்
திறந்து நீ வந்துவிடக் கூடும்
என்னும் அச்சத்துடனேயே...
கால ஓட்டம்...
கால ஓட்டத்தில்
தேங்கி நிற்கிறேன்
நீ என்னை நேசித்திருந்த
அதே இடத்திலேயே...
கடந்து மிதந்து
தொலைவில்...
புள்ளியாய் விரையும்
உன்னைப்பார்த்தவாறே....
சந்திப்பு...
காயப்படுத்தும் என்று அறிந்திருந்தும்
கத்தியோடுதான் வருகிறாய் நீ...
நம் சந்திப்பிற்கான
கவசங்களை அணிந்து
ஆயத்தமாய்க் கொண்டிருக்கிறேன்
நிகழ்வின் முதல் கணத்தில்
உனதொரு பார்வை வீச்சில்
யாவும் களையப்பட்டு
காயப்படுவேன் எனத் தெரிந்திருந்தும்...
மௌனமாய்...
மௌனமாய் காத்திருக்கிறோம்...
புல்நுனிகளும்
பூவிதழ்களும்
நானும்....
நிலவொளியே உருமாறி
பனித்துளியாய் படிமம் கொண்டு
புள்ளிகளாய் விரிந்திருக்கும்
கோலத்தை முடிக்கும்முன்...
சூரியனாய்
நீவந்து கலைப்பதற்கு...
உன் ஞாபகம்...
எப்போது நிகழ்ந்ததென்று
தெரியவில்லை.
பத்திரமாய் தான் வைத்திருந்தேன்
நீ விலகிவிட்ட பின்பும் கூட.
தொடர்ந்த உன் புறக்கணிப்பால்
அது தளர்ந்து வந்தாலும்
இறுக்கித்தான் வைத்திருந்தேன்
நினைவுகளால் முடிந்தவரை.
என்றாலும் ஏதோ ஒரு கணத்தில்
நழுவி விட்டது. கூடவே
அதனை காப்பாற்றியாகவேண்டுமே
என்ற என் கவலையும்...
ஒருமையில் கலப்பதற்கு....
சூனியப் புள்ளி ஒன்று.
சக்தியும் பொருளும் இருக்க
சாத்தியமில்லை அங்கு.
விஞ்ஞான விதிகள் ஏதும்
இல்லாத ஒருமைக் கணம்.
வெடித்தது ஏனோ அன்று
தோன்றிற்று காலமும் வெளியும்.
சக்தியும் பொருளும் எதிராய்
சமைத்தது பிரபஞ்ச உருவை.
அறிவியல் விதிகள் தம்மை
அமைத்துக் கொண்டன தாமே.
எதற்கிந்த மகா பிரளயம்?
எதைநோக்கி இந்தப் பயணம்?
ஏன் இவ்விதம்? இப்படிமட்டும்?
ஒளியும் இருளும் செய்யும் மாயம்.
எத்தனை கோடி நட்சத்திரங்கள்?...
எத்தனை கோடி விண்மீன் கூட்டம்?...
கோடி கோடி கோள்கள் உண்டு...
எத்தனையில் உயிர்கள் உண்டு?
விடைகளைத் தேடத்தேட
மனதினுள்ளும் சூனியப் புள்ளி.
வெடித்திடக் காத்திருக்கிறேன்
ஒருமையில் கலப்பதற்கு.
நெரிசல்...
வாகன வரிசைகள்.
பச்சை விளக்குக்காய்
பறக்கும் மனிதர்கள்.
கரியமில வாயுவின்
கரும்புகை மண்டலம்.
இடையிலும் சிறகடிக்கும்
பட்டாம் பூச்சி....
ஓட்டுவீடுகள்...
ஓடு மாற்றுவது
ஒழுகும் மழைநீருக்கு
வாளிகள் வைப்பது
கோடையின் வெம்மையில்
நடுநசித் தேள்கடி.
காற்றின் சேமிப்பு
முற்றத்தில் குப்பையாய்.
இயற்கை உபாதைக்கோ
தொலைதூரப் பயணம்.
இடர்கள் இத்தனையும்
இருந்த போதினிலும்
ஒட்டிக் கொண்டிருந்த
ஓட்டு வீடுகளில்
வாழ்க்கை
நிறைவாய்தான் இருந்தது
ஒட்டாதிருக்கும்
ஒட்டுவீடுகளை விட...
பாதை மலர்கள்...
இரக்கமின்றி
செருப்புகள் ஏறிச்சென்றாலும்
மனிதர்கள்மீது
பூக்களைச் சொரிவதைமட்டும்
என்றும் நிறுத்துவதில்லை மரம்...
உன்மீதான உணர்வுகளை உதிர்க்கும்
என் மனம் போலவே...
இடைவெளி...
இரு நெருக்கமான புள்ளிகள்தான்
வெகு தொலைவிலும் இருக்கின்றன....
எதிர்புறம் நோக்கும்போது......
பறவைகள்...
The other angle of this statement: We are tresspassing their path and not those winged angels...
அலுமினியப் பறவைகளில் அடிபட்டு உயிர்துறக்கும்
வலுவற்ற பறவைகள் உயிர்பற்றிக் - கலங்காமல்
பறவைகள் தொல்லையால் பலகோடி இழப்பென்றான்
மரமாகி நிற்கும் மனிதன்.
மழலை
பொத்துகின்ற கைகண்டு பூநாணும்- முத்துப்பல்
புன்னகையில் கண்சிரிக்கும் பூமுகத்தைப் பார்த்திருக்கும்
என்னுவகை சொல்வேன்நான் எவ்வாறு?
நீயும் நானும்...
யாரும் நினைப்பதில்லை.
என்னைப் பற்றியே
நானும் நினைப்பதில்லை.
நீயேநானாகி நின்றுவிட்டபின்பு
உன்னைப் பற்றியும்
நான் நினைப்பதில்லை...
***
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
-
நடைபாதையில் இறந்து கிடக்கும் சகமனிதனை சலனமின்றிக் கடக்கிறேன்... தொலைவினில் காக்கை கூச்சல்...
-
கான்கிரீட் தரையில் உதிர்கின்றன அந்தப் பெயர் தெரியாத மரத்தின் விதைகள்...
-
எப்போது நிகழ்ந்ததென்று தெரியவில்லை. பத்திரமாய் தான் வைத்திருந்தேன் நீ விலகிவிட்ட பின்பும் கூட. தொடர்ந்த உன் புறக்கணிப்பால் அது தளர்ந்து வந்த...