மனக்குளத்தில்

மனக்குளத்தில் 
விழுகின்ற 
ஞாபகக் கற்கள் 
கலங்க வைக்கின்றன
கண்களை...

வாழ்க்கை...

தவறவிட்ட வாய்ப்புகளின்
தொகுப்பாய்தான்
தோற்றமளிக்கிறது 
வாழ்க்கை...

ஒரு மொட்டு மலரென

ஒரு மொட்டு மலரென
விரிவதற்க்குதான்
எத்தனை சட்டங்கள்
இந்நாட்டில்...

போகன்வில்லா...

பிழை இலைகள் 
என்று அறிந்திருந்தாலும்
மனம் காண்பதோ
பூக்களைத்தான்...


மரங்களின் ரங்கோலி...

பெயர் தெரியாத அந்த மரம்
தினந்தோறும் தன்வாசலில் 
பரப்பிக்கொள்ளும் ரங்கோலி
ஒரே நிறப் பூவானாலும்
அழகாய்தான் இருக்கிறது... 

வழிதவறி அலையும் பட்டாம்பூச்சிகள்

நகரத்து வீதிகளின்
நியான் வெளிச்சத்தில் 
வழிதவறி அலைகின்றன
பட்டாம்பூச்சிகள்...

குழந்தைகளைத் தொலைத்த வாதாமரங்கள்...

தம்பிதுரை பூங்காவின்
ஒற்றை வாதாமரம்
உதிர்க்கும் பழங்களுக்காய்
காத்திருக்கும் சிறுவர்குழாம் 
இப்போதும் இருக்கிறதென்
பால்ய நினைவுகளில்...

இன்றைக்கும் வாதாமரங்கள்
பழங்களை உதிர்த்து 
காத்திருக்கின்றன...
என்றோ தொலைந்துவிட்ட 
குழந்தைகளுக்காய்...

நியூரான் பிம்பங்கள்...

கணினியிலும் காமிராவிலும்
காப்பாற்றி வைத்திருந்த
நம் உறவின் பதிவுகளை 
நீக்க முடிந்ததெனினும்...

செயலற்று நிற்கிறேன்
ஒவ்வொரு நியூரானிலும் 
உறைந்து கிடக்கும்
உன் பிம்பங்களின் முன்னால்....

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..